லீனாரோய் எழுதியவை | அக்டோபர் 9, 2007

கய்சர்…….


ஊசியாக இறங்கும் மார்கழிப் பனிக் குளிரையும் சட்டை பண்ணாமல்,
எனது வீட்டினில் கூடியிருக்கும் இத்தனை பேரையும் தவிர்த்து,
உங்களுக்கு மட்டும் சொல்லப் போகும் கதையை, கட்டாயம் நீங்கள் கேட்டே ஆக வேண்டும்.
கதை கேட்கும் ஆவல் உங்களுக்கு இல்லாமல் இருக்கலாம்.
அது பற்றி எனக்குக் கவலையே இல்லை.
ஆனால் கதை சொல்லும் ஆர்வம் எனக்கு நிறையவே உண்டு.
புருவ‌ம் உய‌ர்த்தி, வாய் பிளந்து நான் சொல்வ‌தைக் கேட்ப‌வ‌ர்க‌ளைக்
கண்டா‌ல் என‌க்கு ரொம்ப‌ப் பிடிக்கும்.
சரி! கதைக்கு வருகிறேன்.
இது ஒரு உண்மைக் கதை. நடந்த கதை.
ஆனால் அதற்கு நான் கொடுத்த விலை………
வேண்டாம்! இப்போ அது வேண்டாம்!!
நான் சொல்லப் போகும் கதையில் என் சுய தம்பட்டம் நிறையவே இருக்கும்.
நீங்கள் ஏதும் நினைப்பீர்களோ என்று என்னால் அதைச் சொல்லாமல் இருக்க முடியாது.
நான் போலியாக‌ ந‌டிப்ப‌வ‌ன‌ல்ல‌.
இதோ இவ‌ர்க‌ளைப் பாருங்க‌ள். எல்லாரும் அமைதியாக‌ இருந்து நல்லவர்கள் போல ந‌டிக்கிறார்க‌ள்.
ஏனிந்த‌ ந‌டிப்பு? எங்கே தமிழ‌‌ன் கூட்ட‌மாக‌ இருக்குமிட‌த்தில் அமைதியாக‌ இருந்திருக்கிறான். இவ‌ர்க‌ள் யாருமே இய‌ல்பாக‌ இல்லை.
க‌தை, க‌தையென்று, க‌தை சொல்லாம‌ல் க‌ழுத்த‌றுக்கிறேன் என்று நீங்க‌ள் முனுமுனுப்ப‌து புரிகிற‌து.
ச‌ரி இதோ க‌தை…..
இந்த‌க் க‌தைக்கு முக்கிய‌மான‌வ‌ர்க‌ள் இருவ‌ர். ஒன்று த‌வ‌லிங்கம். அது வேறு யாருமல்ல‌‌ நானேதான்.
ம‌ற்ற‌து “க‌ய்ச‌ர்”
க‌ய்ச‌ர் என்ற‌தும் குழ‌‌ம்பி விடாதீர்க‌ள்.
க‌ய்ச‌ரை உங்க‌ளுக்கு நான் இப்போ ந‌ன்றாக‌ அறிமுக‌ப் ப‌டுத்த‌ வேண்டும்.
க‌ண‌ணிக‌ளுட‌ன் இணைக்க‌ப் ப‌ட்டு, அதியுய‌ர் தொழில்நுட்ப‌ங்க‌ளை த‌ன்னுள்ளே அட‌க்கியிருக்கும் மாபெரும் என் செல்ல‌ இய‌ந்திரம் அவன்.
ப‌சியுடன், தனது வாயை “ஆ” வென திறந்து புசிக்கக் காத்திருக்கும் சிங்க‌ம் போல‌, ஐம்ப‌து அடி நீள‌முள்ள‌ இராட்ச‌ச‌ன் அவ‌ன்.
அவ‌னை நான் இய‌ந்திர‌மென்றே சொல்வ‌தில்லை.
அவ‌ன் என் ந‌ண்ப‌ன், என் குழ‌ந்தை.
க‌ய்ச‌ருட‌ன் ப‌த்து வ‌ருட‌ங்க‌ள் ப‌ழ‌கி, அவ‌னும் நானும் ஈருட‌ல் ஓருயிராகிவிட்டோம்.
ஒரு ச‌துர‌ மீற்ற‌ர் இரும்புத் த‌க‌ட்டை “கிர்ராங்” என்னும் ச‌த்த‌துட‌ன் வாயை மூடித் திற‌ப்ப‌தால் ப‌ல‌ ஆயிர‌ம் வ‌ளைய‌ங்க‌ளாக‌ வெட்டுவான் என் ந‌ண்ப‌ன்.
இப்ப‌டி நாள் முழுவ‌தும் வ‌ளைய‌ங்க‌ளை வெட்டி எறிவ‌துதான் அவ‌ன் வேலை.
அவ‌னை மிக‌வும் ப‌த்திர‌மாக‌ துப்ப‌ர‌வாக‌ ப‌ராம‌ரித்து, வேலை வாங்குவ‌து என் வேலை.
தின‌மும் நான் அவ‌னுட‌ன் பேசுவேன்.
அவ‌ன் கிர்ராங் கிர்ராங் என‌ என‌க்கு ம‌ட்டுமே புரியும்ப‌டி ப‌தில் சொல்வான்.
வழ‌‌மை போல‌ இன்றும் அதிகாலை தொழிற்சாலைக்கு வ‌ந்து, க‌ய்ச‌ரை இய‌க்க‌ ஆர‌ம்பித்தேன்.
அடடா! அப்போதுதான் பார்த்தேன். அவ‌ன‌து வாயின் மூலைப் ப‌குதியில் ஏதோ க‌ருப்புக் க‌ட்டியாக இருந்த‌து.
அவ‌னை அப்ப‌டியே நிறுத்தி விட்டு வாயினுள் எட்டிப் பார்த்தேன்.
அது ஒன்றுமில்லை, கொழுப்பு க‌ட்டியாக‌ப் படிந்திருந்த‌து.
அதை அக‌ற்ற‌ வேண்டும‌ல்ல‌வா? என்ன‌ சொல்கிறீர்க‌ள்?
ஆம் நானும் அதைத்தான் நினைத்தேன்.
அப்ப‌டியே, சில‌ சீலைத் துண்டுக‌ளை எடுத்து ந‌ன்றாக தலையை விட்டு,
அவ‌ன‌து வாய்க்குள் புகுந்தேன்.
என‌க்கு ஏனோ ச‌ர்க்க‌ஸில் சிங்க‌த்தின் வாயினுள் த‌லையை விடும் ச‌ர்க்க‌ஸ்கார‌னின் நினைப்பு வ‌ந்த‌து. அத்துட‌ன் சிரிப்பும் வ‌ந்த‌து.
மிக‌வும் லாக‌வ‌மாக‌ கொழுப்பை துணியால் அக‌ற்றினேன்.
மிக‌ப் பெரிய‌ கொழுப்பு.
ந‌ன்றாக‌ துடைக்க‌ எண்ணி ம‌ற்ற‌த் துணியை எடுத்து, கையிலிருந்த‌
துணியை என்னைய‌றியாம‌லே வெளியே வீசினேன்.
அந்த‌த் துணி ச‌ரியாக‌ க‌ய்ச‌ரை இய‌க்கும் குமிழியில் போய் விழுந்த‌து.
நான் என்ன‌ ந‌ட‌க்கிற‌து என்று புரிந்து கொள்வ‌த‌ற்கு முன்ன‌ரே,
என் ந‌ண்ப‌ன், என் உயிர் தோழ‌ன் த‌ன‌து வாயை மூடினான்.
கிர்ராங்……….
என‌க்கு ஒரு உத‌வி செய்ய‌ முடியுமா?
அதோ பாருங்க‌ள் என‌து ம‌னைவி அந்த‌ச் ச‌வ‌ப் பெட்டியின் மேல் விழுந்து க‌த‌றுவ‌தை நிறுத்துகிறாள் இல்லை.
அப்ப‌டி அவ‌ள் ச‌த்த‌ம் போட்டால் நான் எப்ப‌டி என‌து க‌தையைத் தொட‌ருவ‌து.
அவ‌ளைக் கொஞ்ச‌ம் ச‌த்த‌ம் போடாம‌ல் இருக்க‌ச் சொல்ல‌ முடியுமா?

பதிதல்கள்

நல்ல கதையாடல் அண்ணாச்சி! உரையாடல்களில் மட்டும் இன்னும் கொஞ்சம் சொற்சுவை சேர்த்திருந்தால் இன்னும் சூப்பராக இருந்திருக்கும்.

நன்றி லக்கி,
நான் உரையாடலில் இன்னும் கவணத்தை செலுத்த முயற்சிக்கிறேன்.
வருகைக்கு நன்றி

ஏனிந்த கொலைவெறி..? :(

இப்படியான சோகக் கதைகளை விடுத்து, வாசிக்கும் நேயர்களை ஊக்கப்படுத்தும் வண்ணம் மிக நல்ல கதைகளை எழுதுமாறு லீனா அண்ணாவை அன்புடன் கேட்டுக்கொள்ளும்

- பூங்குன்றன் -

சொல்ல நினைத்த கதை நன்றாக இருந்தது. லக்கி சொல்லி இருப்பது போன்று மாற்றம் செய்தால் இன்னமும் நன்றாக இருக்கும்.

நல்லா இருக்குங்க

நல்லா இருக்கு அண்ணா. இன்று தான் முதன் முதலில் பார்க்கிறேன்

இது கருத்து களத்தின் லீனா அண்ணாவா, நிணைவிருக்கிறதா? நீண்ட நாட்கள் ஆகிவிட்டது, உங்களை எல்லாம் விட்டு வந்து.
நெட்டில் எதையோ தேடிக் கொண்டிருந்த போது தற்செயலாய் உங்கள் முகவரிக்குள் நுழைந்தேன். என்னை அறியாமல் ஒரு சந்தோசம் ஒட்டிக் கொள்கிறது.
உங்கள் எழுத்துக்களில் ஏதோ மனதை வருடும் இதம் இருக்கிறது. உங்கள் எழுத்துப் பயணம் தொடரட்டும்.
வணக்கங்களும் வாழ்த்துக்களும் என்றென்றும்.
அன்புடன் அத்தப்ஸ்

அதப்ஸ்,

உங்களுக்கு நான் மெயில் அனுப்பினேன்.

ஆனால் அது திரும்பிவிட்டது.

தயவு செய்து என்னுடன் தொடர்பு கொள்ளவும்.

இன்றுதான் உங்கள் பதிவு பார்த்தேன். சுவார்ஸமாகச் சொல்லும் கலை உங்களுக்கு கை கூடியுள்ளது. வாழ்த்துக்கள். தொடருங்கள்

கொடுமையாக இருக்கு..

மறுமொழி அளிக்கவும்

உங்கள் பதில்:

வகைகள்