ஊசியாக இறங்கும் மார்கழிப் பனிக் குளிரையும் சட்டை பண்ணாமல்,
எனது வீட்டினில் கூடியிருக்கும் இத்தனை பேரையும் தவிர்த்து,
உங்களுக்கு மட்டும் சொல்லப் போகும் கதையை, கட்டாயம் நீங்கள் கேட்டே ஆக வேண்டும்.
கதை கேட்கும் ஆவல் உங்களுக்கு இல்லாமல் இருக்கலாம்.
அது பற்றி எனக்குக் கவலையே இல்லை.
ஆனால் கதை சொல்லும் ஆர்வம் எனக்கு நிறையவே உண்டு.
புருவம் உயர்த்தி, வாய் பிளந்து நான் சொல்வதைக் கேட்பவர்களைக்
கண்டால் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.
சரி! கதைக்கு வருகிறேன்.
இது ஒரு உண்மைக் கதை. நடந்த கதை.
ஆனால் அதற்கு நான் கொடுத்த விலை………
வேண்டாம்! இப்போ அது வேண்டாம்!!
நான் சொல்லப் போகும் கதையில் என் சுய தம்பட்டம் நிறையவே இருக்கும்.
நீங்கள் ஏதும் நினைப்பீர்களோ என்று என்னால் அதைச் சொல்லாமல் இருக்க முடியாது.
நான் போலியாக நடிப்பவனல்ல.
இதோ இவர்களைப் பாருங்கள். எல்லாரும் அமைதியாக இருந்து நல்லவர்கள் போல நடிக்கிறார்கள்.
ஏனிந்த நடிப்பு? எங்கே தமிழன் கூட்டமாக இருக்குமிடத்தில் அமைதியாக இருந்திருக்கிறான். இவர்கள் யாருமே இயல்பாக இல்லை.
கதை, கதையென்று, கதை சொல்லாமல் கழுத்தறுக்கிறேன் என்று நீங்கள் முனுமுனுப்பது புரிகிறது.
சரி இதோ கதை…..
இந்தக் கதைக்கு முக்கியமானவர்கள் இருவர். ஒன்று தவலிங்கம். அது வேறு யாருமல்ல நானேதான்.
மற்றது “கய்சர்”
கய்சர் என்றதும் குழம்பி விடாதீர்கள்.
கய்சரை உங்களுக்கு நான் இப்போ நன்றாக அறிமுகப் படுத்த வேண்டும்.
கணணிகளுடன் இணைக்கப் பட்டு, அதியுயர் தொழில்நுட்பங்களை தன்னுள்ளே அடக்கியிருக்கும் மாபெரும் என் செல்ல இயந்திரம் அவன்.
பசியுடன், தனது வாயை “ஆ” வென திறந்து புசிக்கக் காத்திருக்கும் சிங்கம் போல, ஐம்பது அடி நீளமுள்ள இராட்சசன் அவன்.
அவனை நான் இயந்திரமென்றே சொல்வதில்லை.
அவன் என் நண்பன், என் குழந்தை.
கய்சருடன் பத்து வருடங்கள் பழகி, அவனும் நானும் ஈருடல் ஓருயிராகிவிட்டோம்.
ஒரு சதுர மீற்றர் இரும்புத் தகட்டை “கிர்ராங்” என்னும் சத்ததுடன் வாயை மூடித் திறப்பதால் பல ஆயிரம் வளையங்களாக வெட்டுவான் என் நண்பன்.
இப்படி நாள் முழுவதும் வளையங்களை வெட்டி எறிவதுதான் அவன் வேலை.
அவனை மிகவும் பத்திரமாக துப்பரவாக பராமரித்து, வேலை வாங்குவது என் வேலை.
தினமும் நான் அவனுடன் பேசுவேன்.
அவன் கிர்ராங் கிர்ராங் என எனக்கு மட்டுமே புரியும்படி பதில் சொல்வான்.
வழமை போல இன்றும் அதிகாலை தொழிற்சாலைக்கு வந்து, கய்சரை இயக்க ஆரம்பித்தேன்.
அடடா! அப்போதுதான் பார்த்தேன். அவனது வாயின் மூலைப் பகுதியில் ஏதோ கருப்புக் கட்டியாக இருந்தது.
அவனை அப்படியே நிறுத்தி விட்டு வாயினுள் எட்டிப் பார்த்தேன்.
அது ஒன்றுமில்லை, கொழுப்பு கட்டியாகப் படிந்திருந்தது.
அதை அகற்ற வேண்டுமல்லவா? என்ன சொல்கிறீர்கள்?
ஆம் நானும் அதைத்தான் நினைத்தேன்.
அப்படியே, சில சீலைத் துண்டுகளை எடுத்து நன்றாக தலையை விட்டு,
அவனது வாய்க்குள் புகுந்தேன்.
எனக்கு ஏனோ சர்க்கஸில் சிங்கத்தின் வாயினுள் தலையை விடும் சர்க்கஸ்காரனின் நினைப்பு வந்தது. அத்துடன் சிரிப்பும் வந்தது.
மிகவும் லாகவமாக கொழுப்பை துணியால் அகற்றினேன்.
மிகப் பெரிய கொழுப்பு.
நன்றாக துடைக்க எண்ணி மற்றத் துணியை எடுத்து, கையிலிருந்த
துணியை என்னையறியாமலே வெளியே வீசினேன்.
அந்தத் துணி சரியாக கய்சரை இயக்கும் குமிழியில் போய் விழுந்தது.
நான் என்ன நடக்கிறது என்று புரிந்து கொள்வதற்கு முன்னரே,
என் நண்பன், என் உயிர் தோழன் தனது வாயை மூடினான்.
கிர்ராங்……….
எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா?
அதோ பாருங்கள் எனது மனைவி அந்தச் சவப் பெட்டியின் மேல் விழுந்து கதறுவதை நிறுத்துகிறாள் இல்லை.
அப்படி அவள் சத்தம் போட்டால் நான் எப்படி எனது கதையைத் தொடருவது.
அவளைக் கொஞ்சம் சத்தம் போடாமல் இருக்கச் சொல்ல முடியுமா?
லீனாரோய் எழுதியவை | அக்டோபர் 9, 2007
கய்சர்…….
நிகழ்வுகள் இல் பதிவிடப்பட்டது
லீனாரோய் எழுதியவை | அக்டோபர் 1, 2007
காந்தி ஜெயந்தியும் தொலைக் காட்சியும்…….
நாளை காந்தி ஜெயந்தி.
“மகாத்மா” என்னும் ஒற்றைச் சொல்லால் உலகமே அறியப்பட்ட மாபெரும் மனிதரை நினைவு கூறும் நாள்.”மகாத்மா” என்றால் சிறு குழந்தை கூட, காந்தி என்று புரிந்து கொள்ளக் கூடிய, ஒரு நாட்டின் தந்தை.இந்திய நாட்டிற்கு சுதந்திரம் கிடைப்பதற்கு காரணமாக இருந்தவர்களில் முதன்மையாயிருந்தஉத்தமர் என்று உலகமே ஏற்றுக் கொண்டவர்.
ஆனால்……….நாளை காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, இரண்டு தொலைக் காட்சிகளின் நிகழ்ச்சி முன்னோட்டங்கள் பற்றிய தொகுப்பைக் கண்டேன்.அவை…….
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகளாக………காலை மூத்த நடிகர் ஒருவரின் பேட்டி.அதைத் தொடர்ந்து இசையமைப்பாளர் ஒருவர் தனது மகனுடன் இணைந்து வழங்கும் இசை நிகழ்ச்சி. அதில் பிரபல திரைப் பிரபலங்கள் இணைந்து அடிக்கும் ஆட்டம் பாட்டம்.அதைத் தொடர்ந்து தனுஷ் என்னும் மாபெரும் நடிகரின் பேட்டிதொடர்ச்சியாக சாலமன் பாப்பையாவின் சிரிக்க வைக்கும் பட்டி மன்றம்.இவற்றுடன், முதல்வன் திரைப்படம், நட்சத்திரக் கலை விழா, நடிகை ஜோதிர்மயியின் பேட்டிநடிகர் விக்ரமின் பேட்டி. அத்துடன் மாலை “7ஜி ரெயின்போ காலனி” திரைப் படம்.
ஆனால் காந்தி……….. ஆம் அவர் இருந்தார். காலை 7 மணி முதல் 7.30 மணி வரை சிறிய ஆவணத் தொகுப்பில் மட்டும்.அரையே அரை மணி. அதுவும் காலை நேரத்தில்.இது தவிர்ந்து காந்தி……..ம்ஹூம்….. எங்குமே இல்லை.
இன்னுமொரு தொலைக்காட்சியில் காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டுகாலை 7 மணிக்கு ஒரு திரைப்படம்.பகல் 10.30 மணிக்கு ஒரு திரைப்படம்.மதியம் 1.30 மணிக்கு ஒரு திரைப்படம்.மாலை 5.30 மணிக்கு ஒரு திரைப்படம்.இரவு 8 மணிக்கு ஒரு திரைப்படம்.
இவை அனைத்தும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு க் காட்டப்படும் சிறப்புத் திரைப் படங்கள்.
ஆனால் காந்தி………..அவர் எங்குமே இல்லை. காந்தியா? அவர் எதற்கு?மகாத்மாவான நாட்டின் தந்தைக்கே இப்படியென்றால்…………..
நாம் ஏன் இப்படி இருக்கிறோம்தமிழன் என்ன இளிச்சவாயனா?அல்லது இளிச்சவாயன் ஆக்கப்பட்டானா?நாம் விரும்புவதால் அவர்கள் இவற்றைக் காட்டுகிறார்களா?அல்லது எமக்கு இவை, இவர்களால் திணிக்கப் படுகின்றனவா?திரைப்படங்களுக்கும், திரை உலகத்தினருக்கும், நடிகர்களுக்கும் நாம் நிரந்தர அடிமைகளாகி விட்டோமா?இது எங்கே கொண்டு போய்விடும்? நாம் சிந்திப்போமா……?
நிகழ்வுகள் இல் பதிவிடப்பட்டது
லீனாரோய் எழுதியவை | செப்டம்பர் 23, 2007
எனக்குப் புரியவில்லை……..
ஒரு சம்பவம்………….
ஒரு குரு இறக்கும் தருவாயில் இருந்தார்.
அவரது சீடர்கள் அவரைச் சுற்றியிருந்தனர்.
அந்தக் குருவுக்கு வந்திருக்கும் நோயோ உயிருடன் கொல்லும் புற்று நோய்.
மரணப் படுக்கையில் அவருக்கு இருமல் வந்தது.
அவர் இருமும் போது சளியுடன் கூடிய எச்சில் வெளியே வந்தது.
அதைத் துப்பும் நோக்கோடு அவர் சுற்றும் முற்றும் பார்க்க அவரது தலைமைச் சீடன்
பாய்ந்து எழுந்து அந்த எச்சிலை தனது கையில் ஏந்துவதற்கு கையை நீட்டினார்.
குருவும் அவரது கையிலேயே தனது எச்சிலைத் துப்பினார்.
என்ன ஆச்சரியம்…………….. சீடனின் கையில் விழுந்தது, குருவின் எச்சிலல்ல. அழகான ரோஜா மலர். அப்படிப்பட்ட அன்பே உருவான குரு அவர். அந்தக் குரு இராமகிருஷ்ண பரமஹம்சர். சீடன் விவேகானந்தர். இந்தக் கதை உண்மையோ பொய்யோ என்பதல்ல முக்கியம். அது சொல்லும் கருத்து…………… அவர் ஒரு மகான் என்பதை. விவேகானந்தர், இராமகிருஷ்னர் இருவருமே இந்து மதத்தின் இரு தூண்கள். நல் வழியை மட்டும் போதித்த மகாத்மாக்கள்.
இன்னுமொரு சம்பவம்…………. ஒரு மிகப் பணக்க்காரரின் மகளின் திருமணம். அதற்கு அந்த மூதாட்டி பிரதம விருந்தினராக அழைக்கப்படுகிறார். திருமண விருந்து கோலாகலமாக நடைபெறுகிறது. உணவு அருந்தும் மேசையில் அனைவரும் இருந்து உண்கின்றனர், அந்த மூதாட்டி உட்பட. உண்டபின்னர் அனைவரும் சாப்பாட்டு மேசையை விட்டு அகல, அந்த மூதாட்டி மட்டும் அந்த மேசையில் எஞ்சிய உண்வையும் பண்டங்களையும் தனது பையில் எடுத்துப் போடுகிறார். அதைக் கண்ட அந்த பணக்காரர் அதிர்ச்சியடைந்து, அந்த மூதாட்டியை ஏன் அப்படிச் செய்கிறீர்கள் எனக் கேட்க. தனது ஆச்சிரமத்தில் உள்ள குழந்தைகளுக்கு கொண்டு செல்லத்தான் அதைச் சேகரித்ததாகச் சொல்கிறார். அந்தப் மூதாட்டி அன்னை தெரேசா. மதத்தின் மூலம் அன்பை உலகிற்கே புரியவைத்த புனிதத் தாய் அவர். அவரது அன்பான நடவடிக்கையைக் கண்டு வத்திக்கான் அவருக்கு செயின்ட் அந்தஸ்து வழங்குகிறது.
மேலுமொரு சம்பவம்……………. தனது போதனைகள் ஒவ்வொரு மக்களையும் சென்றடைய வேண்டும் என ஒவ்வொரு கிராமங்களுக்கும் நடையாகச் செல்கிறார் ஒரு மகான். அவரது போதனைகளை ஏற்றவர்கள் பலர் ஏற்காதவர் சிலர். ஒருநாள் தனது பிரதான சீடனுடன் ஒரு கிராமத்திற்கு அவர் செல்கிறார். மக்கள் பலர் அவரை வரவேற்று உபசரிக்கின்றனர். எல்லாருக்கும் தனது தெய்வீகச் சிரிப்பையே பதிலாக தருகிறார். துரதிர்ஷ்ட வசமாக அந்தக் கிராமத்தில் ஒருவர், அவரை மிகவும் மோசமான வார்த்தைகளில் திட்டுகிறார். அவரைத் தொடர்ந்து சென்று மிகவும் கேவலமான வார்த்தைகளில் ஏசுகிறார். ஆனால் அந்த மகானோ அதற்கும் தனது புன்னகையையே பதிலாகத் தருகிறார். எதுவித முகச் சுளிப்பையும் காட்டாமல் உண்டான புன்னகை. இதை அந்த மகானின் சீடர் பார்க்கிறார். அவர் அந்த மகானிடம் கேட்கிறார், “ஏன் நீங்கள் அந்த மனிதருக்கு எந்தப் பதிலும் சொல்லவில்லை. உங்களால் அந்த மனிதன் கேட்ட கேள்விக்கோ, அவர் ஏசியதற்கோ, நிச்சயமாக சரியான பதில் சொல்லியிருக்க முடியுமே” அதற்கு அந்த மகான், “ஆனந்தா, இந்தக் கிராமத்தில் ஒரு பெண்மணி மிகவும் இனிமையான பண்டங்களைக் கொண்டு வந்து எமக்குத் தந்தாளே, அதை நான் பரிவுடன் வேண்டாமென்று மறுத்து அதை ஏற்றுக் கொள்ளவில்லையே. அப்போது அவள் அந்தப் பண்டங்களை என்ன செய்தாள். தன்னிடமே மீண்டும் எடுத்துக் கொண்டு செல்லவில்லையா! அது போல, அந்த மனிதரின் கடுஞ் சொற்களையும் நாம் பரிவுடன் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் என்ன செய்ய முடியும். அதைத் தன்னுடனே திருப்பி எடுத்துக் கொண்டு போக வேண்டுமல்லவா?” அந்த மகான், புத்தர். எதிர்மறையான விசயத்தைக் கூட அன்பாக ஒருவருக்கு எடுத்துச் சொன்ன உன்னதமான வழிகாட்டி.
மதத்தின் பெயரால் மனித குலத்திற்கே செய்தியை அறிவித்தவர்கள் இவர்கள். அன்பு, அகிம்சை, மனிதாபிமானம் அனைத்துக்கும் எடுத்துக் காட்டாக வாழ்ந்தவர்கள். மதத்தின் மூலமாக அவர்கள் எதைப் பெற்றுக் கொண்டார்களோ தெரியவில்லை. ஆனால் அதே மதம் மூலமாக எமக்கு பலவற்றைப் பெற்றுக் கொள்ள, காரணமாக இருந்தவர்கள். ஆனால்…………… இன்றய செய்தி ஒன்று. “முன்னால் எம்பியும், விஸ்வ இந்து பரிஷத் தலைவருமான ராம் விலாஸ் வேதாந்தி, ராமர் பற்றி விமர்சனம் செய்த திமுக தலைவரின் தலையையும், நாக்கையும் துண்டிப்பவர்களுக்கு எடைக்கு எடை தங்கம் பரிசு வழங்கப்படும். அயோத்தியில் உள்ள துறவிகள் இந்த பரிசை வழங்குவார்கள் என்றார்.”
நிகழ்வுகள் இல் பதிவிடப்பட்டது
லீனாரோய் எழுதியவை | செப்டம்பர் 12, 2007
விழிப்புணர்வு என்றால்………
ஐரோப்பாவில் ஒரு நாடு,
அந்த நாட்டின் குடி மகன் ஒருவன்,
மலேசியாவில் போதைப் பொருள் வைத்திருந்தான் என்று கைது செய்யப்பட்டான்.
அவனுக்கு மரண தண்டனை என்று மலேசிய அரசு தீர்ப்பளித்தது.
என்ன நடந்தது………….
அந்த ஐரோப்பிய நாட்டின் அனைத்துப் பத்திரிகைகளும் அலறின.
எங்கள் நாட்டுப் பிரஜையைக் காப்பாற்று என அந்த நாட்டின் அரசை வற்புறுத்தின.
மலேசியாவுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டது அரசு.
தலை கீழாய் நின்று தனது குடிமகனை விடுவித்தது.
ஐரோப்பாவில் இன்னுமொரு நாடு.
அங்கும் ஒரு இளைஞன் ஒருவன்,
மிகவும் கட்டுப்பாடான வேறு ஒரு நாட்டில்,
பதினைந்து வயதான பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து விட்டான்.
அவனுக்கும் அந்த நாட்டு அரசு மரண தண்டனை விதித்தது.
அப்போதும் தனது நாட்டுப் பிரஜைக்காக வாதாடி தன் குடிமகனை மீட்டது அந்த நாட்டு அரசு.
ஆனால் வரிசையாக அந்நிய நாட்டின் கடற்படையால்,
கொல்லப்பட்டும், கடத்தப்பட்டும் சீரளியும் மீனவ மக்களைப் பற்றி,
எந்தக் கவலையும் இல்லாமல் ஒரு நாடு இருப்பது வேதனையாக இல்லையா?
மேற்படி சம்பவங்களில் விடுவிக்கப் பட்டவரகள் மிக மோசமான குற்றவாளிகள்.
அவர்களையே தன் நாட்டுப் பிரஜை என்பதால் காப்பாற்றுகிறது அவர்கள் அரசு.
ஆனால் இங்கோ அப்பாவிப் பொதுமகன் மடிகிறான். கண்டு கொள்ள யாருமே இல்லை.
என்ன இது……..?
ஏனிந்த அலட்சியம்?
இறப்பவன் தமிழன் என்பதாலா? அல்லது ஏழை என்பதாலா?
இந்தியா வல்லரசாக மாற வேண்டும் என்று நினக்கும் மக்கள்,
இதை எப்படி கண்டு கொள்ளாமல் விடுகிறார்கள்.
ஒரு நடிகனுக்குக் கொடுக்கும் முக்கியத்துவம்,
ஏன் ஒரு உயிருக்குக் கொடுக்க முடியாமல் இருக்கிறோம்.
எங்கே தப்பு நடக்கிறது?
விழிப்புணர்வு… விழிப்புணர்வு என்கிறோமே…….
அது எப்போது ஏற்படும் எமக்கு.
நிகழ்வுகள் இல் பதிவிடப்பட்டது
லீனாரோய் எழுதியவை | செப்டம்பர் 8, 2007
சாவின் விளிம்பில்..
சாவு எல்லாரையும் பயமுறுத்தும்
நித்திரையில் துயிலெழுப்பும்
ஐயோ! என அலறித் துடிக்கவைக்கும்
ஆனால் என்னை அது
நித்திரையில் மெல்ல
அணைத்துக் கொள்ளும்
மொத்தமாய் என்னைத்
தழுவிக் கொல்லும்
இத்தினமும் முடிந்தது என
நித்திரைக்குப் போகும் இரவு
எல்லார்க்கும் விடிந்தது
என நினைக்க,
அத்தினமே எந்தன்
சாவின் நாள் ஆகிவிடும்
ஆனாலும் கவலையில்லை….. இன்றும் ஒரு நாளிருக்கு.
கவிதை இல் பதிவிடப்பட்டது
லீனாரோய் எழுதியவை | செப்டம்பர் 5, 2007
புதிய பூவிது………..
வலையுலகிற்கோ, இணையுலகிற்கோ நான் புதியவன் இல்லையாயினும், இந்த வலைப் பூவில் மாலை தொடுப்பதில் புதியவன். உலகெங்கும் கொட்டிக் கிடக்கும் பூக்களின் மத்தியில் தானும் விழத் துடிக்கிறது எனது பூவும்……. இந்தப் பூ நாறுமோ? தேறுமோ? நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும். இன்று முதல் என் கானம் உங்கள் கணணி வாசல் வழி வந்து, உங்கள் கதவைத் தட்டும். ஏற்பதும் மறுப்பதும் உங்கள் பொறுப்பு. இன்றைய தினம் (05.09.2007) எனக்கு ஏனோ நல்ல நாளே! இந்த நாளில் என் முதல் பூவை கையில் அளிக்கிறேன்……..
தினமும் உதிரும் பூக்கள்………
அவள் ஒரு 21 வயது நிரம்பிய இளம் தமிழ் நங்கை. “மீன் பாடும் தேன் நாடு” என அழைக்கப்படும். ஈழத்தின் மட்டக்களப்பைச் சேர்ந்தவள். அழகான தேவதை ஒன்றை உங்களால் கற்பனை பண்ண முடிகிறதா……..? அப்படியேயிருப்பாள் அவள். மிகவும் வசதியான குடும்பத்தின் அழகான இராஜகுமாரி அவள். ஒரு நாள் (வந்தே இருக்கக் கூடாத ஒரு நாள்)………. ஒரு ஆசிரியர் நேர்முகப் பரீட்சைக்கு கொழும்புக்கு சென்று, மீண்டும் மட்டக்களப்பு நோக்கி பஸ் வண்டியில் திரும்பி வந்து கொண்டிருந்தாள். பஸ் மட்டக்களப்பிற்கு 30 கிலோ மீற்றர் தூரத்தில் வரும்போது இராணுவத்தால் மறிக்கப்படுகிறது. திமு திமுவென பஸ்ஸில் ஏறியது இராணுவம். அதில் பயனித்த 17 இளைஞர்களையும், 3 யுவதிகளையும் துப்பாக்கி முனையில் கீழே இறக்குகின்றனர். அதில் அவளும் அடக்கம். அனைவருக்கும் பயத்தில், இதயத்தில் உள்ள இரத்தமே உறைகிறது. இரணுவம் என்றாலே அந்தக் கொடூரம் அவர்களுக்கு எப்படி வருகிறதோ தெரியவில்லை. அவர்களின் முகங்களில் கொலை வெறி தாண்டவமாடுகிறது. ஒவ்வொருவரிடமும் புலிகளுக்கும் உங்களுக்கும் சம்மந்தம் உண்டா எனக் கேட்கப் படுகிறது. அனைவருமே இல்லை என்றே பதிலளிக்கின்றனர். ஆனாலும் அவர்கள் வரிசையாக நிற்க வைக்கப் படுகின்றனர். நடக்கப் போவது அவர்களுக்குத் தெரிந்தே இருக்கிறது. பயத்தில் உடல் நடுங்குகிறது. ஏதேதோ நினவுகள் வந்து போகின்றன. அதிகாரியின் ஒரு கண்ணசைவைத் தொடர்ந்து, திடீரென ஒரு இயந்திரத் துப்பாக்கி சீறிக்கொண்டு குண்டுகளைத் துப்புகிறது. வரிசையாக எங்கள் கண்மணிகள் தரையில் சாய்கிறார்கள். குருதிக்கடல் தாய் மண்ணை நோக்கி ஓடி அதனுடன் கலக்கிறது…….இளம் குருத்துகளை வீழ்த்திய இராணுவம் கொக்கரித்தபடி நகர்கிறது. எவ்வளவு கனவுகள், எவ்வளவு ஆசைகள், எவ்வளவு காதல்கள். எல்லாமே…..! எல்லாமே……!! குருதிக் குளத்தில் மிதக்கிறது. மொத்தமாக இருபது உயிர்கள். தமிழனின் உயிருக்கு ஏன் மதிப்பில்லாமல் போயிற்று? கொலை செய்யும் அதிகாரத்தை யார் கொடுத்தார் இவர்களுக்கு? கடவுள் கூட அந்தக் கொடியவர்கள் பக்கம்தானா? என்ன நியதி இது? அவள்……., அந்தத் தேவதையின் வாயிலிருந்து கடைசியாக வந்த வார்த்தைகள், ” ஐயோ…..! என் அடி வயிறு வலிக்கிறதே…….!! “ அந்த வார்த்தைகளுடன் அவள் உயிர் காற்றில் கலக்கிறது……………. ஆ…..இரண்டு விசயங்களை உங்களுக்குச் சொல்ல மறந்து விட்டேன்……….. 1, அந்தத் தேவதை யாருமல்ல, எனது சகோதரியின் இரண்டாவது மகள். என் ஆசை மருமகள். 2. அந்த இராணுவம் இலங்கை இராணுவமல்ல.
அந்த உயிர்ப் பூவிற்கு, என் வலைப்பூவைக் காணிக்கையாக சமர்ப்பிக்கிறேன்…………
நிகழ்வுகள் இல் பதிவிடப்பட்டது